Labels

Sunday, 15 April 2018

சுற்றுலா


அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!

புத்தாண்டு என்றால் கோவிலுக்கு செல்லவேண்டும் என்பது தமிழர் மரபா ? தெரியவில்லை . எங்கள் வீட்டில் போகவேண்டும் என்றார்கள் . நம்பிகோவிலுக்கு புறப்பட்டோம் .


அரசுப்பேருந்து என்னை 8 மணிக்கு திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் இறக்கிவிட, வீட்டிற்கு வந்ததும் உடனே கிளம்பவேண்டுமென்பது என்றார் என் அம்மா .

காலைஉணவு முடித்து மகிழுந்து எடுத்து புறப்பட்டோம் . திருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் இருபத்தாறு கிலோமீட்டர் தொலைவு பயணித்தால் நாங்குநேரி என்ற ஊரை அடையலாம். அங்கிருந்து
சேவை சாலையை எடுத்து இருபது கிலோமீட்டர் மீண்டும் பயணம் . திருக்குறுங்குடி வந்தடைந்தோம் .


வனப்பகுதிக்குட்பட்ட இடமென்பதால் வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது .

மூன்று கிலோமீட்டர் , கரடுமுரடான பாதையில் ஏறி செல்லவேண்டும் . ஈப்பு வாகனங்கள் மட்டும் அந்த பாதையிலும் ஏறிச்சென்றது . இந்த மூன்று கிலோமீட்டர் சென்றுவர ஆயிரத்திஇருநூறு ரூபாயாம்.  மூன்று கிலோமீட்டர் தானே நடந்து ஏறிவிடலாம் என்று முடிவெடுத்தோம் ,
அதனால் மகிழுந்தை அங்கேயே நிறுத்திவிட்டு வனப்பகுதி சோதனைசாவடியை கடந்து நடக்க ஆரம்பித்தோம் .

குலுங்கி குலுங்கி  வரும் ஈப்பு ஏறி பயணித்திருந்தால் கண்டிப்பாக குடல் வெளியே வந்திருக்கும் போல.  மிகுந்த திறன்வாந்த ஓட்டுனர்கள் அந்த பாதையில் வாகனத்தை இயக்க முடியும் .

வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்ததால், நடப்பதற்கு சற்று சிரமமாக இருந்தது . எனினும் சுற்றி மரங்கள் இருப்பதால் , அந்த மரங்களின் நிழலின் உதவியோடு ஒரு மணிநேரத்தில் மலைமேல் ஏறிவிட்டோம்.

சிறிய அருவியுடன் ஒரு அழகிய இடம் . இவ்வளவு தெளிவான தண்ணீரை இதுவரை கண்டதில்லை . தண்ணீரில் கால் வைத்தவுடன் அப்படியொரு குளிர்ச்சி . அந்த நீரில் ஒரு குளியல் . மலையேறிவந்த களைப்பு அந்த நொடியே மறைந்து போனது. உடலும் மனதும் புத்துணர்ச்சியடைந்தது . அப்படியே அங்குள்ள அழகிய நம்பி கோவிலுக்கு சென்று வழிபட்டோம் .

குளித்ததால் நல்ல பசி எடுத்தது. வீட்டிலிருந்தே கூட்டாஞ்சோறு எடுத்துச் சென்றிருந்தோம்.  அருவி குளியலின் பின் கூட்டாஞ்சோறு. இது திருநெல்வேலி மக்களின் வழக்கம் . குற்றாலம் செல்பவர்கள் இதை அறிவார்கள் . கூட்டாஞ்சோறு கூட்டமாக அமர்ந்து  சாப்பிட்டால் குதூகலம் .

அங்குள்ள தண்ணீர் பருகுவதற்கு  அத்துணை சுவையாய் இருந்தது . நகர வாழ்வில் அத்தனை தாதுக்களும்  RO முறையில் நீக்கப்பட்ட  நீரை குடித்து தானே வாழ்கிறோம் . ஆற்றில் ஓடும் நீர் உடலுக்கு கேடாம், RO நீர் தான் நல்லதாம் . நவநாகரிக வளர்ச்சி நன்றாக உள்ளது . தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நாம் காற்றையும் காசுகொடுத்து வாங்கும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை .







இப்போது தான் புரிகிறது இங்கு வருவதற்கு ஏன் நல்ல சாலை இல்லையென்று. நல்ல சாலையிருந்தால் இந்த இடத்தை சுற்றுலாத்தலமாக மாற்றிவிடுவார்கள் .
சுற்றுலாத்தலங்களை நாம் எப்படி பேணிக்காப்போம் !! தெரிந்தது தானே !! சோப்பு ஷாம்பூ கவர்கள் , மதுபாட்டில்கள் . இன்னும் எத்தனையோ.!!

அதனால் இந்த இடம் சுற்றுலாத்தலமாக மாறாமல் இருப்பதே மேல் .

-இயற்கையும் கொஞ்சம் வாழட்டும்.



No comments:

Post a Comment