Labels

Saturday, 31 March 2018

வண்ணத்துப்பூச்சிகள்

இன்று விடுமுறை. வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்ததால் வெளியில் செல்லமுடியவில்லை. வீட்டிலேயே பொழுதை கழிப்பது மிகவும் சிரமமாயிருந்தது .

எவ்வளவு நேரம் தான் மடிக்கணினியுடனும்
சூட்டிகைபேசியிடனும் தொலைக்காட்சிப்பெட்டியோடும் இருப்பது .???

எண்ணிப்பார்க்கிறேன்,!!!இந்த தலைமுறை குழந்தைகளின் நிலையை .

பள்ளி முடிந்து வீடு திரும்பும் அவர்களின் மாலைபொழுதுகள் தினமும் இப்படித்தானே இருக்கும் .

 "வெளியே போய் விளையாடாதே ! ஏதாவது ஆகிவிடப்போகிறது உனக்கு !! பேசாமல் வீட்டிலே ஏதாவது விளையாடு! இந்தா இந்த புதிய சூட்டிகைப்பேசி , இதில் ஏதாவது விளையாட்டை  பதிவிறக்கம்  செய்து விளையாடு "என்று சொல்லும் அம்மாக்களின் எண்ணிக்கை  98 சதவிகிதம் .

அதுவும்  அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளென்றால் அவர்கள் நிலைமை சொல்லும்படியாக இல்லை!. பக்கத்துவீட்டில் இருப்பவர்களை தெரிந்து வைத்திருத்தல் ஏதோ மிகப்பெரிய பாவச்செயல் என்றே திணிக்கப்பட்டு  வளர்க்கப்படுகிறார்கள்  .

நான் படிக்கும்போது தெரிந்திருக்கவில்லை இந்த தொழில்நுட்ப விளையாட்டுகளெல்லாம் . எங்களுக்கு தெரிந்தது எல்லாம் வெளியில் சென்று விளையாடுவது தான்.


புதைமிதி ஏதுமில்லாமல் புழுதியியில் விளையாடிய நாட்கள் அவை .

அத்தனையும் நினைவிற்கு வரவில்லை . நினைவில் எட்டியவை சில தருணங்கள் -.

1.பம்பரம்- வட்டத்திற்குள் ஒருவரின் பம்பரம் மாட்டும் . மற்றவர்கள் அதை வெளியில் எடுக்க பம்பரத்தை ஓங்கி வீசுவார்கள் . வீசுபவனின் பம்பரத்தின் ஆணி நம் பம்பரத்தின் மேல் படும்போது கண்கள் கலங்கி விடும் .

ஆனால் அதிகம் அடிவாங்கும் பம்பரமே நன்கு சுழலும் .அதிகம்  அடிவாங்குகிற பம்பரங்கள் மெருகேறுவதைப் போல, அதிகமான  பிரச்சனைகளை சந்திக்கிறவனின் மனமும் வலிமையடைகிறது.

2. பச்சக்குதிரை - ஒருவன் குனிந்திருக்க அவனை தாண்டுவதே இந்த விளையாட்டு . சுற்றுக்கு சுற்று குனிந்திருப்பவன் சற்று உயரத்தை அதிகமாக்குவான் . கடைசி சுற்றில் எழுந்தே நிற்பான். அதையும் தாண்டவேண்டும் .

எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அதை தாண்டி செல்லும் வலிமை நமக்குள் இருக்கிறது .

3. கோலி - கலர்கலராக கோலி குண்டுகளை வாங்கி வைத்தாலும் அது பெரிய கோலியால் அடித்து உடைக்கப்படும் .

என்ன தடைகள் வந்தாலும் உடைத்தெறி .






4. கில்லி. கிரிக்கெட்டுக்கு மூலதனமே கில்லி தான்.







5. பட்டம் - பழைய தினத்தந்தி நாளிதழில் இக்குச்சிகளை வைத்து , சோற்று பருக்கைகளை கொண்டு குச்சிகள் நகராமல் ஒட்டி நாமே செய்த பட்டம் மேலே பறக்கும் போது,  நாமே பறப்பது போன்று ஓர் உணர்வு .


வெறும் பேப்பர் பறக்காது . அதற்கு சரியான வடிவம்கொடுத்து  இக்குச்சிகள் தாங்கி பிடிப்பதுபோல் நாமும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு கொஞ்சமாவது உதவியாக இருப்போம் .

6. திருடன் போலீஸ் - ஒரு குழு திருடர்களை ஒரு குழுவாக போலீஸ் கண்டுபிடிப்பது ...

குழுவாக செயல்பட்டால் எந்த செயலையும் எளிதாக செய்யலாம் . இது இன்று அலுவலகங்களில் ஒரு திறனாக பயிற்சிவகுப்புகளெல்லாம் வைத்து கற்று தருகிறார்கள் .! இது நாம் சிறு வயதிலே கற்று விட்டோமே!!


இன்னும் விளையாட்டுகள் நிறைய இருக்கின்றன . எழுதினால் பக்கங்கள் தாண்டிவிடும் . அதனால் பட்டியலிடுகிறேன் 

*கண்ணாமூச்சி (ஐஸ்பாய்) 
*பாண்டி 
*சைக்கிள் பந்தயம் 
*கல்லா மன்னா 
*நாடு பிரித்தல் 

கண்டிப்பாக கிரிக்கெட்டும் தான். 


வெறும் காலில் மண்ணில் விளையாடி இந்த மண்ணோடு உறவாய் இருந்த நாட்கள் மறைந்து விட்டன !!! மறைந்தும் விட்டன !!

 கை  கால்களில் பெற்ற தழும்புகளை பார்க்கும்போது தான் தெரிகிறது, தழும்புகள் மறையாது  போல் இந்த நினைவுகளும் மறையாதென்பது ..

ஓடிவிளையாட வேண்டிய குழந்தைகளை வீட்டில் அடைத்து வைப்பது அவர்கள் சிறகுகளை வெட்டுவதை போல் ...

அந்த வண்ணத்துப்பூச்சிகளை சுதந்திரமாக பறக்கவிடுவோம் !!




Friday, 23 March 2018

குரல்

அலுவலகத்தில்  இன்று என்னுடைய மேலாளருடன் ஒரு சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. எந்தெந்தத் திறமைகளை நாங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும்,  தினமும் தங்களுக்கு அலுவலகத்தில் ஏற்படும் நிறைகுறைகளைப்பற்றியும் பேசுவதே இந்தக்கூட்டத்தின் நோக்கம்.

எல்லோரும் தங்களுக்கு சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை     என்றும் தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ள எதாவது பயிற்சிகள் ஏற்பாடு செய்து தருமாறும் பேசிக்கொண்டிருக்க , ஓர் குரல் . அது என்னுடைய நண்பன் தினேஷ் பவுன்சர். அவன் பேசியது பின் வருமாறு .

"நான் சொல்லும் கருத்துக்கு இது சரியான தருணமா இல்லையா என்று தெரியவில்லை ,  எனினும் சொல்கிறேன் .  நம் அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் நம் ஒவ்வொருவரின்  மேஜைக்கு அடியில் தரப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு தங்கள் கைகளையே பயன்படுத்துகிறார்கள் . நம் குப்பைத்தொட்டிகளுக்கு ஏற்றவாறு பிளாஸ்டிக் கவர்கள் வைத்து அதனுள் குப்பைகளை போட்டால் அவர்களுக்கு அது எளிதாக இருக்கும் , மேலும் பாதுகாப்பாகவும் இருக்கும் ."


இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது? வேற வேல இருந்தா பாருப்பா.

பெரிய விஷயம் எதுவும் இல்லை . சரி ஒத்துகிறேன் . ஆனால் தன்னுடைய  Career பற்றி பற்றி பேச எவ்வளவோ இருந்தும் அதில் ஏதும் கேட்காமல் , மற்றவர்களை பற்றி அந்த நேரத்தில் பேசநினைப்போமா நாம் ?

தனக்காக வாழ்வதா வாழ்க்கை ?

பிறருக்கவும் வாழ்வோம் .

வாழமுடியாவிட்டாலும் நம் Voice-ஆவது கொடுப்போம். 

Monday, 19 March 2018

காட்சிப்பிழை

எந்த ஒரு முன்னனுபவமும் இல்லாமல் எழுத ஆரம்பித்த என்னை மதித்து இந்த இடுவைகளை வாசிக்கின்ற உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நேற்று நடந்த ஒரு நிகழ்வு தான் என்னை இப்படி பேச விளைகின்றது .  அதை விவரிக்கிறேன் உங்களுக்காக  ..


பொதுவாக வாரவிடுமுறையென்றாலே நண்பர்களோடு ஊர் சுற்ற கிளம்பிவிடுவேன். ஆனால் இந்த வாரம் ஒரு மாறுதலாக அமைந்தது . சொல்லப்போனால் எனக்குள் ஒரு மாற்றத்தையே தந்தது.

இடம் : Spaces, பெசன்ட் நகர் , சென்னை.
நேரம் : மார்ச்சு மாதம் 17 ஆம் தேதி மாலை 5 மணி . 

காட்சிப்பிழை என்கிற ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் இலவசமாக நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்டனர்.

தெருக்கூத்து கலையையை மையமடுத்தியே இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. 


இந்த காலத்தில் கூத்துகளையெல்லாம் யார் பார்க்கிறார்கள்.?நம்மில் பலருக்கும் இது பெயரளவிலே தெரியுமே தவிர நேரில் பார்த்திருக்கமாட்டோம்.இந்த தலைமுறைக்கு கூத்து என்றால் என்னவென்றே தெரிந்திருக்க வாய்ப்பில்லை!.

இப்படியிருக்க , இந்த கலைகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான ஓர் நிகழ்வுதான் காட்சிப்பிழை.


கூத்து நிகழ்வுகள் நிழற்படங்களின் கண்காட்சி மற்றும் விற்பனை இந்த நிகழ்வின் ஒரு அங்கமாக இருந்தது .என்னடா இது இவங்களும் விற்பனைக்காகவே இதை நடத்துகிறார்கள் என்று தவறாக எண்ணவேண்டாம் தோழர்களே .கூத்து கலைஞர்களை ஆதரிப்பதற்காகவே இந்த விற்பனை . விற்பனையில் ஒரு பகுதி அந்த கலைஞர்களுக்கே சென்றடையும் .


கண்காட்சியைத்தொடர்ந்து தமிழ் பாரம்பரிய ஒயிலாட்டம், கோலாட்டம் ,  கரகம் , பறை முதலிய பல நிகழ்ச்சிகள் நடந்தன.


பொதுவாக இதுமாதிரி கலைஞர்கள் படித்திருக்கமாட்டார்கள் என்பது ஒரு பொதுவான கருத்து . ஆனால் இவர்களோ பட்டம் பெற்றவர்கள். அவர்கள் அனைவரும் லொயோலா கல்லூரியில் பணிபுரிகிறார்கள். நம் பாரம்பரிய கலைகள் அழிந்துவிடக்கூடாது என்பதற்காக தங்கள் வாழ்க்கையை அதற்காக அர்ப்பணித்தவர்கள் .பணம் முக்கியம் அல்ல தங்கள் கலை தான் பெரிது என்று எண்ணும் இவர்களை தலைவணங்குகிறேன் .


அவர்களின் நிகழ்ச்சியை  பார்க்கும்போது மெய்சிலிர்த்தது. நம்மிடமே இவ்வளவு  பாரம்பரிய பாடல்களும் நடனங்களும் இருக்க நாம் ஏன் இசை நிகழ்ச்சிகளை விழாக்களுக்கு நாடுகிறோம் .  யாரோ ஆரம்பித்து வைத்த பழக்கத்தை அப்படியே பின்தொடர்கிறோம்.

இந்த உலகம் மாறாது . மாறாக நாம் மாறுவோம் .மாற்றத்தை உருவாக்குவோம் . உங்கள் வீட்டு விழாக்களில் தமிழ் பாரம்பரிய பாடல்களும் நடனங்களும் இடம் பெற செய்யுங்களேன் ... தமிழன் தலை நிமிர்ந்து சொல்லுங்களேன் .

இரண்டாவது நாளாக காட்சிப்பிழை தொடர்ந்தது . இரண்டாம் நாளன்று "மதுரைவீரன்" என்ற தலைப்பில் ஒரு கூத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அன்று தான் முதன் முதலில் தெருக்கூத்தை நேரில் பார்க்கிறேன். பாடல்களாலும் வசனங்களாலும் அவர்கள் கதையை சொன்னார்கள் . அதில் ஒரு காட்சியில் நெருப்பு கவசம் அணிந்து ஒருவர் வந்து ஆடிய ஆட்டம் என்னுள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது . வண்ணங்கள் பூசிய முகத்தில் அவர் காட்டிய முகபாவனைகள் ஆக்ரோஷமாக பேசிய வசனங்கள் , இப்படியும் நடிக்க முடியுமா என்று யோசிக்க வைத்தது .

இன்றைய நவீன தொழில்நுட்ப காலகட்டத்தில் ஒரு செய்தியை மக்களிடம் சேர்ப்பது மிக எளிது .. ஆனால் இதெல்லாம் இல்லாத காலத்தில் தெருக்கூத்துகளே பல காவியங்களை  மக்களிடம் கொண்டு சேர்த்தது.

யாரோ எழுதிக்கொடுக்கும் வசனங்களை பலமுயற்சிகளுக்கு பின் நடித்து , திருத்தங்கள் செய்து , வேறு யாரோ இசையமைத்து பாடிய பாடலுக்கு வெறும் வாயசைத்து , வேறொருவர் சொல்லிக்கொடுக்கும் நடனத்தை ஆடி ஒரு படத்தில் கதாநாயகனாக நடிப்பவனை கொண்டாடுகிறோம் நாம் .


ஆனால் தாமாகவே வசனமெழுதி, இசையமைத்து , நடனமும் ஆடி மக்களிடம் பல முக்கிய கருத்துக்களை கொண்டு செல்லும் இந்த தெருக்கூத்து கலைஞர்களையல்லவா நாம் கொண்டாட வேண்டும் ..

நடிகனுக்கு நாட்டையே கொடுக்கும் நாம் இந்த கலைஞர்களுக்கு நாடகங்கள் நடத்த வாய்ப்புகளையாவது கொடுப்போமே?


நேற்று நாடகம் முடிந்தவுடன் எல்லாரும் எழுந்து கை தட்டினர்.
ஒரு பெண்மணி தன்னுடைய குழந்தையை அந்த குழுவினரோடு புகைப்படம் எடுப்பதற்காக நிறுத்தினார். அப்போது நடந்த சம்பவம் தான் என்னை உலுக்கிவிட்டது . அந்த கலைஞர் அந்த குழந்தையின் கால்களை தொடுவது போன்று  நின்றார் .. அந்த பெண்மணி உடனே வந்து   நிறுத்தினார் .  ஆனால் அந்த கலைஞரோ அந்த குழந்தையின் காலகை தொட்டவரே புகைப்படம் எடுத்துக்கொள்ள சொன்னார் . அதற்கு அவர் கூறிய காரணம் " நீங்கள் எல்லாரும் என்னுடைய கலையை கண்டு ரசித்து கைத்தட்டினீர்கள். உங்களுக்கு நான் அளிக்கும் மரியாதை தான் இது " .

எதையுமே எதிர்பாராமல் மக்களின் கைதட்டல் மட்டுமே பெரிது என்று வாழும் இந்த கலைஞர்கள் இருக்கும் வரை எந்த கலையும் அழியாது ..

நாம் அவர்களை தலையில் தாங்க வேண்டாம். கைதட்டி வரவேற்றாலே போதும் !!!

- நன்றி .




Saturday, 17 March 2018

தேநீர்த்துளிகள்

சார் நீங்க டீடோட்லரா? (Teetotlar)

இல்லை .நான் டீட்டோலர்(Tea-totlar).

ஆம்.  தேநீர்  தான் என்னை முழுவதுமாக ஆட்கொண்டுள்ளது.

 சராசரியாக நம் உடம்பில் 4.5 முதல் 5.5 லிட்டர் இரத்தம் இருக்குமாம். ஆனால் , என்னோட உடம்பில் 3  லிட்டர் தான் இருக்கும்னு நினைக்கிறேன். மீதம் முழுவதும்  தேநீர் தான் இருக்கும்.

இன்றைக்கு இருக்கிற Bachelor ல் பாதி  பேருக்கு தேநீர் தான் முதல் காதலி .அதனுடன் செலவிடும் நேரமே அவர்களுக்கு அதிகம்.
இரண்டிற்கும் ஒரே வித்தியாசம் என்னவென்றால் , தேநீரினால் செலவு பத்து ரூபாய் தான் , ஆனால் காதலியால் ????


தேநீருடனான என் வாழ்வில் சில நினைவுகள் !-


காலையில் எழுந்ததும் தேநீர் அருந்துவது என்ன சுகம் .. அதுவும் பல் துலக்காமல் அருந்தினால் , அடடே என்ன ஒரு ஆனந்தம் .

மழை பொழிகின்ற பொழுது கையில் ஒரு தேநீர் குவளையோடு அமர்ந்து மழையை ரசித்திராதவர் இருக்க வாய்ப்பில்லை.
வாழைக்காய் அல்லது  மிளகாய் பஜ்ஜி இருந்தால் இன்னும் பிரமாதம்.

கல்லூரி காலங்களில் ,இரவு பன்னிரண்டு மணிக்கு பொழுது
போகவில்லையெனில்  கிளம்பி  இரண்டு கிலோமீட்டர் நடந்து சரவணம்பட்டியில் உள்ள ஜோதி பேக்கரியில் குடித்துவிட்டு
திரும்புவோம். அந்த நாட்களை மறக்க முடியுமா .?? நன்றி கிஷோர் அண்ணா !!

அதுத்தது IT வாழ்க்கை ஆரம்பித்தது. எங்க வீட்டுக்கு வருபவர்களில் பாதி பேர் கேட்கக்கூடிய ஒரே கேள்வி , தம்பி நிறைய சம்பளம் வாங்குற வேலையில் இருக்கிறாயே எப்போ கல்யாணம் ? IT கம்பெனியில வேலை செய்கிறவர்களை விட அந்த கம்பெனி வெளியில் தேநீர் விற்பவர் அதிகம் சம்பாதிக்கிறார் என்று தெரியாத மக்கள் ... சொல்றதுக்கு எதுவும் இல்ல .

அலுவலக விடுமுறை நாட்களில் மாலை இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்னை புறவழிச்சாலையில் 
பஜ்ஜியுடன் தேநீர் அருந்திய நாட்களை மறக்க முடியுமா பாலாஜி , குரு , அபிஷேக் , மோகன் ???? அலுவலகத்துக்கு நாம் வாகனத்தை ஒட்டிய தொலைவை விட தேநீர் கடைக்குச்செல்ல ஒட்டியதே அதிகம். இதை தினமும் முகநூலில் பதிவு செய்து வேறு வைத்திருக்கிறோம் ஹாஷ்டாக்க்குகளோடு #TN72 #TN38

ஒரு ஆறு மாதங்கள் பணிச்சுமை மிக அதிகம். மூச்சு விடுவதற்கு கூட நேரம் இருக்காது .. அப்படி சென்று கொண்டிருந்த நாட்களில் தினமும் மாலை 5 மணிக்கு வெளியில் வந்து ஒரு தேநீர் குடித்து மீண்டும் கணினி முன் அமர்வோம் . மீண்டும் இரவு பதினோரு மணியளவில் ஒரு குலவை தேநீர் . இந்த வேலை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் எனக்கு மனஅழுத்தம் வந்ததேயில்லை . காரணம் இந்த தேநீர் அல்ல . தேநீர் அருந்த உடன் வந்த நண்பர்கள் தான்.  தினேஷ் பவுண்சர், பிரதாப் , துரை , ஷங்கர் ஜி, சாய் , அருண் . 🙋


அலுவலகத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது நான் எனக்கு தேநீரில் mixture போட்டு குடிப்பது பிடிக்குமென்று சொன்னேன். யாருக்குமே புரியல . தேநீரில் mixture a ??
எங்கள் ஊரில் பால் இல்லாமல் தான் காப்பி போடுவார்கள் . அதற்கு கடுங்காப்பி என்று பேர் . அதில் முறுக்கு இல்லனா Mixture போட்டு தான் குடிப்போம்.

இதுவரை நீங்கள் இதை முயற்சி செய்து பார்க்கவில்லை என்றால் செய்து பாருங்களேன். கடுங்காப்பி - முறுக்கு இவையிரண்டும் இரட்டைக்கிளவி போன்று .


தேநீர் உடலுக்கு நல்லதா கெட்டதா ? இதை நான் ஆராய விரும்பவில்லை . தேநீர் என் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தியிருந்தாம்கூட உள்ளத்திற்கு புத்துணர்வையும் , வாழ்க்கைக்கு நிறைய கருத்துக்களை தந்துள்ளது .  கல்லூரியில் நான் கற்று கொண்டதை விட என் நண்பர்கள் கற்று கொடுத்ததே அதிகம் ...


தேநீர் என் உடலில் பாதி அளவு கலந்திருக்கலாம் .  ஆனால் உயிரிலே கலந்தது நண்பர்கள் தான் .

இத்துணை நல்லது செய்த தேநீருக்கு என் நன்றிகள் !!!



Monday, 12 March 2018

எங்கும் இசை!

எங்கள் அலுவலகத்தில் சக ஊழியர்கள் பற்றி தெரிந்துகொள்வதற்காக "Know about your colleague " மின்னஞ்சல் ஒன்று பகிரப்படும். அதில் ஒரு பகுதியில் அந்த நபரின் பொழுதுபோக்கு பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும் . "Listening to Music" இசை கேட்பது என்பதே பலரின் பதிலாக இருந்தது ..

இதை நீ  நேராகவே சொல்லிருக்கலாமே ? .

உங்கள் கேள்வி நியாயம் தான்.  இந்த  "Know about your colleague "  மின்னஞ்சல் முறை ஒருவேளை உங்கள் அலுவகத்தில் இல்லையென்றால் நீங்களும் தொடங்குவீர்கள் தானே ..சகஊழியர்களை பற்றி தெரிந்துகொள்வது நல்லது தானே. உங்கள் நட்பு வட்டாரம் பெருகுமே. அதற்காக தான் இந்த மின்னஞ்சல் எடுத்துக்காட்டு.

இந்த மினஞ்சல் விளம்பரத்துக்காக அல்ல இந்த இடுகை . இசை கேட்பது நல்ல விஷயம் தான். சில நேரங்களில் அது நம்மிடம் பேசுகிறது, மிகவும் அசாதாரணமான வழிகளில் நம் இதயங்களை இழுக்கிறது, இருட்டிலும் நம்மை பலப்படுத்துகிறது.கல்லைக்கூட கரைக்கும் தன்மை இசைக்கு மட்டுமே உண்டு .

ஓய்வு நேரங்களில் இசை கேட்கலாம் .அது நம் நெஞ்சை இலகுவாக்கும்.

அனால் எல்லா வேளைகளிலும் இசையில் மூழ்கியிருப்பது சரியா?
இல்லை என்பது என்னோட கருத்து . 

காலையில் கல்லூரிக்கு செல்லும் பேருந்திலும், அலுவலகத்திற்கு செல்லும் பேருந்தில் ஹெட்செட் போட்டு செல்வோர் எண்ணிக்கை மிக அதிகம். நீங்கள்  நல்ல இசை கேட்கின்றீர் . இசை உங்கள் மனதை இலகுபடுத்தும்.நல்லதுதான் . மாறாக பக்கத்தில் வரும் உங்கள் நண்பர்களிடம் பேசிக்கொண்டு வரலாமே?, உங்கள் மனதுக்கு ஒரு தைரியம் கிடைக்குமே. நல்ல பாடலை தேடுவவதை விட்டு நல்ல நண்பனை தேடுங்கள் .

பெரும்பாலும் நம்மில் பலர் சொந்த ஊருக்கு திரும்பி செல்லும்போது பையில் எது இருக்கிறதோ இல்லையோ. கண்டிப்பாக ஹெட்செட் கட்டாயம் இருக்கனும். தொலைதூர ரயில் பயணங்களில் ஹெட்செட் போட்டு பாட்டு கேட்பதை தவிர்த்து , உங்கள் அருகில் உள்ள பயணிகளிடம் பேசிக்கொண்டு செல்லலாமே ? நான் சொன்னது தவறென்றால் மன்னிக்கவும் .

இன்னும் பலர் இருக்கிறார்கள்.சாலையில் நடந்து செல்லும்போதும், இருசக்கர வாகனம் ஓட்டிச்செல்லும் போதும் ,  ரயில்வே பாதை கடக்கும் போதிலும் ஹெட்செட் போட்டே செல்கிறார்கள் (ஏதோ இவர்கள் தான் பெரிய MSV, இளையராஜா போல் நினைப்பு ). //என்னோட நண்பர்கள் சிலரை இதற்க்காக திட்டியிருக்கிறேன் . எனக்காக  தங்களை மாற்றிக்கொண்ட அந்த உள்ளங்களுக்கு நன்றி //

நடந்து செல்லும்போது இசைவெள்ளத்தில் நனைந்து செல்லவேண்டும் என்பது உங்கள் ஆசையென்றால் நீங்கள் பின்னால் வரும் வாகனத்தை எப்படி கவனிப்பீர்கள்.

வாகனஓட்டிகளால் தான் விபத்துகள் ஏற்படும் என்றில்லை. இப்படி ஹெட்செட் அணிந்தபடியே செல்லும் உங்களாலும் விபத்துக்கள் ஏற்படக்கூடும் . இசைவெள்ளத்தில் நனைகிறேனென்று ரத்தவெள்ளத்தில் நனைந்துவிடாதீர்கள் ..

சாலையில்  Helmet அத்தியாவசியம்.ஆனால் ஹெட்செட் அனாவசியம் .

-கோபத்துடன் பகிர்கிறேன் இந்த பதிவை .



கிராமத்தில் ஒரு நாள்

எப்பவுமே பரபரப்புடன் இருக்கிற சிட்டி லைப்ல- இருந்து பழகிவிட்ட எனக்கு, கிராமத்தில் பொழுதை கழித்த ஒரு நாள் எனக்கு அளித்த அனுபவங்களின் தொகுப்பு தான் இந்த போஸ்ட்   ...

திருநெல்வேலி யில் நாங்குநேரி தாலுகாவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் அது (பெயர் சொல்ல வேணாம் னு நினைக்கிறேன்) .
அம்மாவின் அலுவலக பணிக்காக உடன் செல்லவேண்டிருந்தது ,காரணம் அந்த ஊருக்குள் செல்ல பேருந்து வசதி இல்லை. பேருந்தில் சென்றால் ஊரின் விளக்கில் இறக்கி விட்டுவிடுவார்கள் போல. அங்கிருந்து ஊருக்குள் நடந்து தான் செல்ல வேண்டுமாம். இந்த வெயிலில் நடந்து செல்வது சிரமம் என்பதால் நான் கார- ல அழைத்துச்சென்றேன் .

காலை 10 மணியளவில் அந்த ஊரின் எண்ட்ரன்ஸ்கு- வந்தடைந்தோம் .
பேருந்து நிறுத்தத்தை தாண்டி ஊருக்குள் செல்வதற்கு சரியான ரோடு கூட இல்ல .. குண்டும் குழியுமாக இருந்த அந்த ரோடு-ஐ சிரமப்பட்டு  கடந்து ஊருக்குள்  சென்றது எங்களோட கார் . அங்குள்ள ஒரு அங்கன்வாடியில் தான் அன்றைய கேம்ப். தடுப்பூசி போடணும் அது தான் அன்றைய பணி. என்னோட அம்மா உள்ளே சென்றார்கள் . நான் காரை ஒரு வேப்பமரத்தடியில் நிறுத்திவிட்டு கார்லயே காத்திருந்தேன் .

வேப்பமரத்தடி நிழல் காற்று தரும் குளிர்ச்சியை எந்த AC காற்றும் தருவதில்லை .. உண்மை..

சரி போய் ஜூஸ் ஏதாவது குடிச்சிட்டு வரலாம் னு கிளம்பினேன்.இளநீர் எங்கயாவது கிடைக்குமா னு பாத்தேன் கிடைக்கவே இல்ல.அந்த கிராமத்தில் கண்ணுக்கு தென்பட்டது ஒரே ஒரு பெட்டிக்கடை தான். அங்க விசாரித்தேன் , 25 ரூபாய் கொடுத்து யாரும் இளநீர் இங்க வாங்க மாட்டாங்கன்னு சொன்னார்  .அதனால இங்க விலையிறதெல்லாம் சிட்டி-ல இருக்கிற கடைகளுக்கு கொடுத்திறாங்க .என்னடா இது 25 ரூபா குடுத்து இளநீர் வாங்கமாற்றங்க இந்த ஊர் மக்கள் . ஆனா நம்ம 45 /50 ரூபா குடுத்து வாங்கிறோமே !.

கிராமத்துல இருந்தா தெரிஞ்சவங்க வீட்ல இருந்தே எல்லாம் வந்திரும் போல. நாம தான் சூப்பர் மார்க்கெட்-ல தண்டமா பணத்தை செலவு பண்ணறோம்.

சரி.. திரும்பி அந்த மரத்தடிக்கே சென்றேன். ரொம்ப போர் அடிச்சதால மொபைல்ல- எடுத்தேன் .. எல்லா அப்ப்ளிகேஷனையும் ஓப்பன் பண்ணிட்டு இருந்தேன்.  மொபைல் லால் ஒரு மணிநேரம் கழிந்தது .

ரொம்ப போர் அடிச்சுது.. சரி , அந்த அங்கன்வாடிக்குள்ள போனேன் . ஒரு சூரியகாந்தி தோட்டத்துக்குள்ள நுழைந்த மாதிரி இருந்துச்சு .. மொத்தமா 10 பூக்கள் ! ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு !!!!

அப்படியே ஒரு ஓரமாக அமர்ந்து அந்த குழந்தைகளை பாத்துட்டு இருந்தேன் . அந்த குழந்தைகளை பார்க்கும் போது நிறைய எண்ணங்கள் என்னுள் தோன்றின . . கணினிகளோடே கழிந்த என்னோட நாட்கள் கொடுத்த அத்துணை டென்ஷன்களும் ஒரு நொடியில் மறைந்தன.  ஒரு குழந்தையின் சிரிப்பிற்கு அத்துணை வலிமையுண்டோ !! ஆம் !!!.

அரசு பள்ளிகள் என்றாலே மட்டமா தான் இருக்கும்னு- யார் சொன்னது ?அதுக்கு நேர்மாறா இருந்தது அந்த பள்ளி.அந்த ஸ்கூல் ஒரு Building தான் ..  நல்லா சுத்தமா வச்சுருந்தாங்க . ஆங்காங்கே வரைபடங்கள் இருந்தன .

மதியஉணவு திட்டம் எதுக்கு கொண்டுவந்தாங்க-னு எனக்கு அன்னைக்கு தான் புரிஞ்சுது .. சரியா 12 மணியளவில் எல்லா குழந்தைகளையும் சாப்பிட உக்காரசொன்னாங்க . எல்லா குழந்தைங்க முகத்துலயும் பசி தெரிஞ்சுது .  எல்லா குழந்தைகளும் வரிசையாய் அமர்தன. காய்கறி  கலவை சாதம் போட்டு எல்லார்க்கும் கொடுத்தாங்க .  எல்லாருமே தானாக எடுத்து சாப்பிட தொடங்கினர் . 2 1/2 வயசு  தானே இருக்கும் அத்தனை பேருக்கும். யாருமே ஊட்டி விடாம தானா சாப்பிடறாங்களே .. தானாக சாப்பிட்டு முடிச்சு தட்டுகளை எடுத்து வைத்தனர். டைனிங் manners லாம் அந்த குழந்தைகள் கிட்ட கத்துக்கணும் போல. !

நம்ம ஊர் ளையும் Playschools இருக்கு அங்க எவ்ளோ பீஸ் வாங்கிறாங்க , என்ன சொல்லித்தந்திர போறாங்க .?? ஏதும் இல்ல .
வெறும் ABCD மற்றும் 1234 தானே .. இந்த அங்கன்வாடியிலும் அதை தான் சொல்லி தராங்க. எதுக்கு Playschool-ல பணத்தை செலவு பண்ணனும். அரசு அங்கன்வாடியியே சேர்க்கலாமே?
அதுஎப்படி இவ்ளோ சம்பளம் வாங்குற நான் எதுக்கு அரசு பள்ளியில் சேர்க்கணும் . என்னோட ஸ்டேட்டஸ் என்ன ஆகிறது னு  கேக்கற மக்களுக்கு பதில்சொல்லும் விதமாக  இருக்கிறார் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் . தன்னோட இரண்டரை vayathu மகள் ரித்திஷாவை விருதுநகர் நகராட்சி முஸ்லிம் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் ப்ரி.கே.ஜி சேர்த்துள்ளார். பள்ளியில் சேர்ந்தது மட்டும் அல்லாமல் தினமும் மகளை அழைத்து வந்து விடுவதையும் தொடர்ந்து செய்துவருகிறார். சூப்பர் சார் நீங்க !!!

ஓடி ஆடி விளையாடறது தான குழந்தை பருவம் . அதை விட்டுட்டு விளையாடாத , வீட்டுக்குள்ள உக்காரு Playstation-ல விளையாடு , மொபைல- ல கேம் விளையாடு னு நாம்ம அவங்கள வீட்டுக்குள்ளேயே அடைக்காமல்  இருப்போம். சிறகடித்து பறக்கட்டும் குழந்தைகள் ,,,

-நன்றி.







Saturday, 10 March 2018

நினைவுகள் நீங்காமல் !!!

ஈர்த்துவிட்டாய்  என்னை,
சந்தித்த மூன்றே நொடிகளில்-ஏனோ ;
மாற்றிவிட்டாய்  தன்னை
இந்த மூன்றே ஆண்டுகளில்- தானோ .



இந்த உலகமே எனை
சூழ்திருந்த போதிலும் ,
தனித்து தெரிந்தேனே
உன் சிரிப்பினால் தானே !!



முகநூல் பக்கங்கள் முழுவதும்
நிரம்பின உன்னால் ;
கூட்டமே சேர்ந்தது என்பின்னால்,
அதுவும்  உன்னாலேயே !!



நினைவு முழுவதும் வலம் வருகின்றன,
நாம் சுற்றிய இடங்கள் ;
கனவிலும் நினைவுபடுத்துகிறாய் நீ
என் உறவுகளை !!!



உற்று நோக்கினேன் ,
நீ சிணுங்கினாய் ;
விரல் தொட்டேன்,
நீ சீறினாய்!!!



எண்ணிப்பார்க்கிறேன் !!!!
உனக்காக நான் செலவழித்தது- பல்லாயிரங்கள்!
எனக்கு நீ தந்ததோ.....
.
.
.
.
.
.
.
.
.

கோடிக்கணக்கான நினைவுகளை!!!!

-------------------------------------------------------------------------------------------------------

நான் என்னோட camera va நெனைச்சு எழுதினேன் ...நீங்க வேற ஏதும் நினைக்கலன்னா சரி ..


ஈர்த்துவிட்டாய்  என்னை,                         
சந்தித்த மூன்றே நொடிகளில்-ஏனோ ;          //பார்த்தவுடனே  வாங்கிவிட்டேன் 
மாற்றிவிட்டாய்  தன்னை
இந்த மூன்றே ஆண்டுகளில்- தானோ .         //எல்லாரும் சொல்றாங்க நல்லா                                                                                                   போட்டோ எடுக்கிறேன் னு



இந்த உலகமே எனை
சூழ்திருந்த போதிலும் ,                                        // கேமராவில் உள்ள Bokeh                      தனித்து தெரிந்தேனே                                             (Background Defocus) எபெக்ட்
உன் சிரிப்பினால் தானே !!



முகநூல் பக்கங்கள் முழுவதும்                     //facebook fulla photos
நிரம்பின உன்னால் ;
கூட்டமே சேர்ந்தது என்பின்னால்,                // DP க்கு போட்டோ எடுக்க
அதுவும்  உன்னாலேயே !!



நினைவு முழுவதும் வலம் வருகின்றன,  //எல்லா  Trips-um
நாம் சுற்றிய இடங்கள் ;
கனவிலும் நினைவுபடுத்துகிறாய் நீ            //Trips முக்கியம் இல்ல
என் உறவுகளை !!!                                                  கூட வந்த நண்பர்கள் தான்



உற்று நோக்கினேன்,                                           //கேமரா Auto-focus Mode 
நீ சிணுங்கினாய் ;                                                    la இருந்திருக்கு போல😲
விரல் தொட்டேன்,                                              //Shutter button press பண்ணேன் 
நீ சீறினாய்!!!                                                          //Flash popup ஆச்சு



எண்ணிப்பார்க்கிறேன் !!!!
உனக்காக நான் செலவழித்தது- பல்லாயிரங்கள்!      // 40,000
எனக்கு நீ தந்ததோ.....
.
.
.
.
.
.
.
.
.

கோடிக்கணக்கான நினைவுகளை!!!!           // 2 TB போட்டோஸ் -Memories





இப்படி தான் நான் பாடினேன் !!!

Friday, 9 March 2018

உலக மகளிர் தினம் 2018 !!!

உலக மகளிர் தினம் வழக்கம் போல்  மார்ச்,8 அன்று கொண்டாடப்பட்டது.

வழக்கம் போல எல்லா கட்சி தலைவர்களும் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர்... மேடை பேச்சுக்களில் , பொது கூட்டங்களில் அவர்களை வாழ்த்தினார்கள், அடடே !!!

நிறைய பேர் வீட்டிலும் அலுவலகத்திலும் அணிச்சல்(cake) வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.

தன்னுடைய அம்மா, தங்கை, மனைவி, தோழி என தங்களை சுற்றி உள்ள அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள் ..சமூக வலைத்தளங்களில் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர் .. வாட்ஸாப்ப் செயலியில் நிலையை(status) முழுவதும் மகளிர் தின தகவல்கள் தாம் ,

சரி .வாழ்த்துக்கள் தெரிவிப்பதால் மட்டும் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது என்று சொல்ல முடியுமா ???

மகளிர் தினம் என்று ஒன்று கொண்டாடுவதே தவறு .. மகளிர் தினம் தினம் கொண்டாடப்படவேண்டியவர்கள்..

வளைந்து கொடுக்கும் தன்மை இருப்பதால் தான் நதிகளுக்கே கங்கை , கோதாவரி என பெண்களின் பெயர்களில் அழைக்கிறோம்...

எதையும் பொறுத்துக்கொள்பவள் பெண் என்பதாலோ என்னவோ அவளுக்கு எதிராக இத்தனை கொடுமைகள் நடக்கின்றன இந்நாட்டில் .

நிர்பயா,ஸ்வாதி, ஹாசினி , தொடங்கி இன்று கல்லூரி வாசலில் கொலை செய்யப்பட்ட kk நகர் அஷ்வினி வரை , இன்னும்  எத்தனையோ குற்றங்கள் .....

இதற்கு ஒரு முடிவு  வரட்டும். பின்னர் பட்டாசு வெடித்தே கொண்டாடுவோம் மகளிர் தினத்தை . 

பெண்ணியம் மதிப்போம் ...





இடிசாம்பார் -ன்னா?


பெரும்பாலும் எல்லார்க்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை...

திருநெல்வேலி side-u பொங்கல் அன்னைக்கு வைக்கிற சாம்பார் பேர் தான் இடிசாம்பார்.... Ready made சாம்பார் பொடி எல்லாம் use பண்ணாம , நம்மளே வறுத்து இடிச்சு, எல்லா காய்கறிகளும் போட்டு, பண்றது தான் இந்த சாம்பார்-oda speciality ...


சரி எதுக்கு Blog-க்கு இந்த பேர்?

அது தான் எனக்கே தெரியல,, Blog create பண்றப்ப Name கேட்டுது.. இதை வச்சுட்டேன்... அவ்ளோதான்...


சரி. இடிசாம்பார் ன்னா எல்லா காய்கறிகளும் போட்டு பண்றது மாதிரி , நம்மளும் எல்லா topic பத்தியும் பேசலாமே ன்னு இந்த பேர் வச்சுட்டேன் .. இனிமே ஏதாவது usefula post பண்ண வேண்டியது தான்

குறிப்பு :இதுக்கு முன்னாடி எதுவுமே எழுதியது இல்லை .. தவறுகள் இருந்தால் மன்னிக்கவும் ...