Labels

Sunday, 5 May 2019

என்னா வாழ்க்கை டா !!

எந்த தலைப்பில் பதிவிடலாம் என்று யோசித்து கொண்டு இருந்தபொழுது, தோழி திவ்யா இருதயநாதன் அவர்கள்- அட நம்ம it liFe (மென்பொருள் வாழ்க்கை) பற்றி எழுது என்று ஆலோசனை கூறினார்.

சரி எழுதுவோமே! (பொதுவாக)

மென்பொருள் பணி என்றால் 50 ஆயிரம் சம்பளம், மகிழுந்து (கார்), கிழக்குக் கடற்கரைச் சாலையில் வீடு -இதுதான் வெளியிலிருந்து பார்ப்பவர்கள் மனநிலை. உண்மையிலேயே அப்படித்தான் இருக்குமோ என்று எண்ணி இந்த பணியில் சேர்ந்தேன். ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன.இன்று வரை இந்த மூன்றுமே கைக்கு எட்டாத தூரத்தில் இருக்கின்றன.

மாறாக கடன் அட்டையில் (கிரெடிட் கார்டு) மாதத் தவணை மட்டும் ஏறிக்கொண்டே போகிறது. இருக்கிற கடன் அட்டைக்கே தவணை கட்ட முடியவில்லை, இதில் உங்களுக்கு புதிய கடன் அட்டை சலுகை உள்ளது என்று தினமும் 10 அழைப்பு மையங்களில் (கால் சென்டர்) இருந்து தொலைபேசி உரையாடல்கள் வேறு!

அப்போ மென்பொருள் நிறுவனங்களில் சம்பளம் அதிகம் இல்லையா என்று கேட்டால்.??? மற்ற துறைகளைக் காட்டிலும்  அதிகம் தான். புதிதாக பணியில் சேருவோருக்கு சராசரியாக மூன்றரை லட்சம் ஆண்டு வருமானம் இருக்கலாம். (நிறுவன கோட்பாடுகள் படி சம்பளத்தை வெளியில் சொல்லக்கூடாது,😁😁😁)

என்ன சம்பளம் வாங்கி என்ன பிரயோசனம். செலவு அதைவிட அதிகமாக இருக்கிறதே. திருத்தம்.--- செலவு பண்ண வைத்து விடுகிறார்களே.  வேகப்பம் (பீஸ்ஸா) , பர்கர் பன்னீர் தோசை -இப்படியே செலவு பண்ண வைக்கிறாங்க...


மென்பொருள் துறையில் பெரியவர் சிறியவர் என்ற வயது பாகுபாடே கிடையாது. சார் , மேடம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்த தேவையேயில்லை. தலைமை அதிகாரியை கூட அவர்கள் பெயர் சொல்லி அழைக்கலாம். பயம் இல்லாமல் அனைவரிடமும் சகஜமாக பேசலாம். கூட்டு முயற்சிக்கு (டீம் வொர்க்) இதுவும் ஒரு வித்தாக அமைகிறது. (ஆனால் நம் கல்லூரியில் அண்ணா அண்ணா என்று அழைத்த அடுத்த ஆண்டு மாணவன் இங்கு நம்மளை பெயர் சொல்லி அழைப்பது சங்கடமாகத்தான் இருக்கிறது).


மற்ற துறைகளைக் காட்டிலும் சம்பளம் அதிகம் என்பதால் என்னவோ இங்கு பெரும்பாலானவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகவே உள்ளது. அதற்குக் காரணம் பணியை முடிப்பதற்காக வரையறுக்கப்பட்ட நேரம் (project timeline). குறித்த நேரத்தில் பணியை முடிக்க வேண்டும் என்று ஓடிக்கொண்டே இருப்பதால் மன இறுக்கமும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

மற்றவர்களைவிட தான் அதிகமாக வேலை செய்வதாக காட்டிக் கொள்ள வேண்டுமே என்ற எண்ணம் 95% ஊழியரிடம் உள்ளது. (பணி உயர்வு வேண்டுமே நண்பா!!). சிலரின்  உயர்வு மற்றவர்கள் கண்களை உறுத்த தான் செய்யும். இயற்கை தியதி.

முன்பெல்லாம் வேலை செய்தாலே பணி உயர்வு இருக்கும். ஆனால் தற்போதுள்ள நிலையில் வேலையை விட புதிதாக என்ன செய்தோம் என்பதே முக்கியமானதாக இருக்கிறது. இருக்கட்டும் இருக்கட்டும்.


சரி அப்படியே உயிரைக் கொடுத்து வேலை செஞ்சாலும் தீபாவளி பொங்கலுக்கு ஒரு நாள் தான் விடுமுறை. அந்த ஒரு நாளைக்கு சொந்த ஊருக்கு பயணம் செய்து வர பேருந்து கட்டணம் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டி இருக்கிறது.!!!

இங்க என்ன பண்டிகை கொண்டாட்டம் என்றாலும் இன ஆடை (Ethnic day) தான். அப்படியே ஒரு புகைப்படம். சொந்தங்களை பார்பதற்கு ஏது நேரம்! முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் வாழ்கிறோம்.

அலுவலக நேரம் என்பது எட்டரை மணி முதல் ஆறரை மணி வரை என்ன இருந்தாலும் அலுவலக நேரம் தாண்டி வேலை செய்ய வேண்டிய நாட்கள் எண்ணிலடங்காதவை. சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை விடுமுறைதான் (கண்டிஷன்ஸ் அப்ளை).

கோடை மழை போல அவ்வப்போது
டீம் டின்னர், இன்ப விருந்து (ட்ரீட்) மற்றும் சுற்றுலா .  கொஞ்சம் மன அமைதிக்கான வழி 🥰🥰


சரி இவ்வளவு மன அழுத்தமான வேலையில இன்னும் இருக்கிறேன். ஏன் ஏன்???

என் நட்பு வட்டாரம். 😍😍😍


எல்லா வேலைகளிலும் சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கத்தானே செய்யும். அவற்றை கடந்து செல்வதுதான் வாழ்க்கை.

என்னா வாழ்க்கை டா !!!